| கடும் பாதுகாப்புக்கு மத்தியில் உச்சிமாநாடு இன்று ஆரம்பம் |
| [02 - August - 2008] [Font Size - A - A - A] |
| * சார்க்கிற்கு அப்பால் இரு தரப்பு சந்திப்புகளில் தெற்காசிய தலைவர்கள் மும்முரம் ரொஷான் நாகலிங்கம்
பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) 15ஆவது உச்சிமாநாடு இன்று சனிக்கிழமை பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகிறது. மாநாட்டில் பங்கேற்கும் அமைப்பின் அங்கத்துவ நாடுகள் எட்டின் தலைவர்களும் அவதானிகள் அந்தஸ்தைப் பெற்றிருக்கும் தேசங்களின் பிரதிநிதிகளும் கொழும்பிற்கு நேற்று வெள்ளிக்கிழமையே வருகை தந்துவிட்டதுடன், சார்க் உச்சிமாநாட்டுக்கு புறம்பான இருதரப்பு சந்திப்புகளும் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன. நேற்றுப் பகல் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி, பங்களாதேஷ் அரச நிறைவேற்று ஆலோசகர் பக்ருடீன் அகமட், மாலைதீவு ஜனாதிபதி கையூம், ஆப்கான் ஜனாதிபதி ஹமிட் கர்சாய் ஆகியோர் வருகை தந்தனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை பூட்டான் பிரதமர் தின்லே, நேபாள காபந்துப்பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா ஆகியோர் வருகை தந்ததுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நேற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டனர். முன்னொருபோதுமில்லாத வகையில் கடுமையான பாதுகாப்புடன் இன்று ஆரம்பமாகும் உச்சிமாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடையும். மாநாட்டின் இறுதியில் பிராந்தியத்தின் 8 நாடுகளின் தலைவர்களும் இணைந்து கொழும்புப் பிரகடனத்தை வெளியிடவுள்ளனர். சார்க் அமைக்கப்பட்டு 23 வருடங்கள் கடந்துள்ள நிலையில் ஒத்துழைப்பே மிகவும் முக்கியமானதென்பதை உணர்ந்திருப்பதாக குறிப்பிட்டுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பிராந்திய உறுப்பு நாடுகள் இணைந்து தம்மை வலுப்படுத்திக் கொள்வதன் மூலம் எதிர்நோக்கும் பொதுவான சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியுமென கூறியுள்ளார். புதுடில்லியில் கடந்த வருடம் இடம்பெற்ற உச்சிமாநாட்டின்போது “பிரகடனம்’ என்ற கட்டத்தை தாண்டி அதனை அமுல்படுத்துவதென்ற கட்டத்திற்கு செல்வதென்று தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். சார்க் அபிவிருத்தி நிதியம், சார்க் உணவு வங்கி, தெற்காசிய பல்கலைக்கழகம், சப்ரா, மக்கள் மத்தியிலான தொடர்பாடல்கள் என்ற இலக்குகளை சார்க்கின் 15 ஆவது உச்சிமாநாடு மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் என்ற நம்பிக்கையை இந்தியப் பிரதமர் வெளிப் படுத்தியுள்ளார். இதேவேளை, பயங்கரவாதப் பிரச் சினையை எதிர்கொள்ள சார்க்கின் ஒத்துழைப்புக்கான ஏற்பாடுகள் அவசியமென இலங்கை வலியுறுத்தி வருவதுடன் குற்றச்செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக சட்ட ரீதியில் பரஸ்பர ஒத்துழைப்பை பெறும் உடன்படிக்கை கொழும்பு பிரகடனத்தில் இடம்பெறுவதற்கு சார்க் அமைச்சர்கள் மட்ட சந்திப்பில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இலக்கை எட்டுவதற்கு ஏற்புடையதாக தெற்காசிய நாடுகளின் உள்நாட்டுச் சட்டங்கள் காணப்படவில்லை எனவும் அதற்குரிய ஏற்பாடுகளை அந்தந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சார்க் கூட்டமைப்புக்கு அப்பால் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கே உறுப்பு நாடுகள் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருதரப்பு கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. சார்க் அமைப்பில் இருதரப்பு விவகாரங்களை பேசக்கூடாதென்ற விதிமுறை உள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான ஏற்பாடுகளை சார்க் சாசனத்தில் இடம்பெறச் செய்யப்போவதாக கூறப்பட்டாலும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற பிராந்தியத்திலுள்ள பெரிய நாடுகள் அதனை இருதரப்பு விவகாரமாக கருதி கலந்துரையாட விரும்பமாட்டார்கள் என்பது வெளிப்படையான உண்மையென சிக்கிம் பல்கலைக்கழக உபவேந்தர் மகேந்திரா பி.லாமா கூறியுள்ளார். இதனால் பிராந்தியத்தின் பொதுவான பிரச்சினைகளை விட இருதரப்பு பிரச்சினைகள் உள்நாட்டு அரசியல் ரீதியில் முக்கியத்துவம் பெறுவதால் கிடப்பில் போடப்படும் நிலைமையே காணப்படுவதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது.
|
